தமிழகம் :
இந்திய அரசானது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான M.ஜெகதேஷ் குமாரைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய தலைவராக நியமித்துள்ளது.
இவர் ஐந்து வருடக் காலத்திற்கு அல்லது 65 வயதை அடையும் வரை இவற்றுள் எது முன்னதோ அதுவரையில் அந்தப் பதவியினை வகிப்பார்.
இந்தியா :
நாசாவின் நிதியுதவி பெற்ற அட்லஸ் என்ற அமைப்பானது ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறை, பூமிக்கு அருகில் உள்ள பொருள்களின் (NEOs) முழு இருண்ட வெளியையும் ஆய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு முதல் ஆய்வுக் கலமாகும்.
அட்லஸ் சமீபத்தில் சிலி மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இடங்களில் இரண்டு கூடுதல் கண்காணிப்பு மையங்களை நிறுவி தெற்கு அரைக்கோளம் வரையில் அதன் கண்காணிப்பு வரம்பினை விரிவுபடுத்தியுள்ளது.
இது இப்போது நான்கு தொலைநோக்கிகளைக் கொண்டுள்ளது. அட்லஸ் (Asteroid Terrestrial-Impact Last Alert System – ATLAS) என்பது ஒரு அதிநவீன குறுங்கோள் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
2018-19 ஆம் ஆண்டில் ஒரு நிபுணர் குழு மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் மணிப்பூரின் கைவினை வரைபடமானது தயாரிக்கப்பட்டது.
அனைத்துக் கலை வடிவங்களுக்கும் சமமான, செறிவு மிக்க ஈடுபாட்டினை வழங்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட முதல் வகை வரைபடம் இதுவாகும்.
இது மணிப்பூரின் கைத்தறி மற்றும் கைவினை மரபுகள் பற்றிய சில விவரங்களை வழங்குகிறது.
திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான கமால்பூர்-குர்மகாட் எல்லைச் சந்தைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த எல்லைச் சந்தையானது தலாய் மாவட்டத்தில் நிறுவப்பட உள்ளது. இந்தத் திட்டமானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்தும்.
இது இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார மற்றும் உணர்ச்சி உறவுகளை வலுப்படுத்தும்.
ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள 216 அடி உயர சமத்துவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் சுவாமிகளால் இந்த சிலையானது கருத்துருவாக்கப்பட்டது.
பக்தி இயக்கத் துறவி ராமானுஜாச்சாரியாரின் 1000வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் 12 ஆம் நாளான ஸ்ரீ ராமானுஜ சஹஸ்ராப்தி சமரோஹத்தின் ஒரு பகுதியாக இந்தச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
மும்பை – நாக்பூர் விரைவுச் சாலையைக் கண்காணிப்பதற்காக ITS என்ற தொழில் நுட்பமானது பயன்படுத்தப்பட உள்ளது.
ITS என்பது ஒரு நுண்ணறிவு அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பு ஆகும். இது ஒரு கொரியத் தொழில்நுட்பம் ஆகும்.
இது நாட்டின் மிக வேகமான மற்றும் நீளமான விரைவுச் சாலையாகும். இது ஓர் எட்டு வழி விரைவுச் சாலையாகும்.
இந்தச் சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியும். விபத்துகளைத் தடுப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும்.
உலகம் :
நெதர்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய எச்ஐவி திரிபினைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு VB திரிபு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திரிபானது 3.5 மடங்கு முதல் 5.5 மடங்கு வரையிலான அதிக நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.
இந்தத் திரிபானது, 1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நெதர்லாந்து நாட்டில் தோன்றியது. ஆனால், இத்தொற்று 2010 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கியது.
சிலிக்கா மேம்பாட்டு ஆணையமானது, அண்மையில் சிலிக்கா ஏரியில் வருடாந்திரக் கணக்கெடுப்பை நடத்தியது.
இது சிலிக்கா ஏரியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு ஆகும்.
நாட்டில் உள்ள ஒட்டு மொத்த கடல் புல் பரவலில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த ஏரியில் உள்ளது என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
கடல்புல் என்பது நீருக்கடியில் உள்ள தாவரமாகும். இவை கடலில் அல்லது கடல்பரப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளில் காணப் படுகின்றன.
விளையாட்டு :
இந்திய கிரிக்கெட் அணி, தனது ஆயிரமாவது போட்டியில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால், மேற்கு இந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணித் தலைவர் ரோகித் ஷர்மா 60 ரன்கள் எடுத்தார்.
இன்றைய தினம் :
1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.
1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.